Friday 3rd of May 2024 04:14:00 PM GMT

LANGUAGE - TAMIL
.
தனுஸ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை பொலிஸ் அதிகாரியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க அனுமதி!

தனுஸ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை பொலிஸ் அதிகாரியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க அனுமதி!


சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்த போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கை பொலிஸ் அதிகாரியை அடுத்து வரும் 5 நாட்கள் சி.பி.சி.ஜ.டி காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அடுத்த கம்பி பாடு கடற்கரையில் கடந்த 5 ஆம் திகதி மெரைன் பொலிஸாரினால் இலங்கை மொனராகலை பகுதியைச் சேர்ந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் பிரதீப் குமார் பண்டார என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

போதை பொருள் விற்பனை செய்வதில் இவருக்கும் தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை நிழலுக தாதா அங்கொட லொக்காவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 5 நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் எடுத்து விசாரிக்க இராமநாதபுரம் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (17) அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ் கந்த பகுதியிலுள்ள மர கடையிலிருந்து இலங்கை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் மர கடையின் உரிமையாளர் மற்றும் பொலிஸ் அதிகாரி பிரதீப் குமார் பண்டாராவின் சகோதரர் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

பிரதீப் குமார் பண்டாரா தனது சகோதரர் மூலம் மர கடையின் உரிமையாளருக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்தது பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மூட்டையில் அச்சிடப்பட்டிருந்த முத்திரையும், தமிழ்நாட்டில் உயிரிழந்த இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவின் போதைப்பொருள் மூட்டைகளில் உள்ள முத்திரையும் ஒன்றாக இருந்ததால் பிரதீப் குமார் பண்டாரா இலங்கை பொலிஸாரிடம் இருந்து தன்னை காப்பற்றி கொள்ள மன்னாரில் இருந்து சட்ட விரோதமாக படகு ஒன்றில் தமிழ்நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.

மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் பண்டார விசாரணைக்கு பின் இராமேஸ்வரம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தற்பொழுது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் பண்டாராவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க இராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை(17) சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்பொழுது குமார் பண்டாராவை 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி காவலில் எடுத்து விசாரிக்க இராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்தது. விசாரணை முடிந்ததும், அவரை எதிர் வரும் 21ஆம் திகதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE